Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் வெள்ளை வேனில் இளைஞரை கடத்திய குழு

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவரை வெள்ளை வேனில் தாக்கி கடத்திய கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாடகை வண்டி சாரதிகள் இருவர் (11) கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல், மல்சிறிபுர பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இந்த நபர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தைச் சேர்ந்த இரு வாடகை வண்டி சாரதிகள்,  வெள்ளை வேனில் வந்த இளைஞனை தாக்கி, கடத்திக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தை அவதானித்த பிரதேசவாசிகள் குழுவொன்று கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டளைத் தளபதிக்கு அறிவித்ததையடுத்து, அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

பின்னர், அந்த இடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு கேமராக் காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், வேனை அடையாளம் கண்டு, வாகன ஓட்டிகள் தங்கியிருந்த அடியம்பலம், பீலாவத்தை பகுதியில் உள்ள இரண்டு மாடி வாடகை வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, ​​கடத்தப்பட்ட இளைஞனை அடித்து அறையொன்றில் கட்டிவைத்துள்ளதுடன், கடத்தலை மேற்கொண்ட இரு சாரதிகளும் ஹெரோயின்  எடுத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் மற்றைய சாரதி ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வாடகை வண்டிகளை ஓட்டி வருவதுடன், அப்பகுதி முழுவதும் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Exit mobile version