Site icon Tamil News

கொழும்பு நோக்கி வந்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் வந்தது

கொழும்பு துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி கோவா கடற்கரையில் இருந்து சுமார் 102 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த போது குறித்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது

ஆபத்தான இரசாயனங்கள் உட்பட 1,154 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பணியாளர் இறந்தார், மீதமுள்ள பணியாளர்களை பத்திரமாக மீட்கும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த இந்திய கடற்படையின் 4 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

தற்போது தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது போன்ற கப்பலில் ஏற்படும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

அபாயகரமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கப்பலின் பகுதி தீயினால் சேதம் அடைந்தால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு பதிலளிக்க தயாராக இருக்குமாறு இந்திய கடலோர காவல்படை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில்,  குறித்த கப்பல் விபத்து காரணமாக நாட்டின் கடல் எல்லைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version