Site icon Tamil News

மக்கள்தொகை குறைந்து வரும் நிலையில் திருமண பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ள சீனப் பல்கலைக்கழகம்!

சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று, திருமணம் தொடர்பான தொழில் மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்காக புதிய இளநிலை பட்டப்படிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை குறைந்துவருகிறது. இதை அதிகரிக்கும் வகையில், அந்நாட்டு அரசு பல அதிரடி திட்டங்களையும் நடைமுறைகளையும் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அந்நாட்டில் பெய்ஜிங்கில் உள்ள சிவில் விவகார பல்கலைக்கழகம், ’திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை’ என்ற புதிய இளநிலை பட்டப்படிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் பட்டப்படிப்புத் திட்டம் வருகிற செப்டம்பர் முதல் மாதம் தொடங்க இருக்கிறது. இதன்மூலம், திருமணம் சார்ந்த தொழில்கள் மற்றும் கலாசாரத்தை ஊக்கப்படுத்தி தொழில் வல்லுநர்களை உருவாக்கவிருப்பதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் படிப்பின் மூலம் சீனாவின் திருமணம் மற்றும் குடும்பக் கலாசாரத்தை மாணவர்கள், பொதுமக்களிடையே முன்னிலைப்படுத்தி, திருமண பழக்கவழக்கங்களில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தவுள்ளதாக கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 12 மாகாணங்களில் இருந்து 70 மாணவர்களை ‘குடும்ப ஆலோசனை வழங்குதல், உயர்நிலை திருமணத் திட்டமிடல்கள், பொருத்தம் பார்க்கும் சாதனங்களை உருவாக்குதல்’ போன்ற துறைகளில் சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக் குறைவு, வேலைவாய்ப்பின்மை, தனிமையில் இருப்பது போன்ற காரணங்களால் பலரும் திருமணத்தை தள்ளிப் போடுவதாகக் கூறப்படும் வேளையில், இந்தப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version