Site icon Tamil News

கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ; இருவர் பலி, 14 பேர் மீட்பு!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கட்டுமான பணியின் போது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 14 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கார்டன் ரீச் பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. உரிய அனுமதியின்றியும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக கூற்பபடுகிறது. இன்று அதிகாலை இங்கு தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது, கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், உடனடியாக மீட்புப் பணிகளை துவக்கினர். இன்று காலை வரை 14 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘விபத்து நேர்ந்த உடன் மீட்பு பணிகள் உடனடியாக துவங்கப்பட்டது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள். மருத்துவம், தீயணைப்பு மற்றும் இதர துறைகளைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்துள்ளது. மாநில அரசு சார்பில் இந்த கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படும். அருகாமையில் உள்ள சில வீடுகளும் சேதம் அடைந்துள்ளது. அவர்களுக்கும் அரசு உரிய உதவிகளை வழங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த சம்பவத்திற்கு அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக உள்ள பிர்ஹத் ஹக்கீமின் கோட்டையாக கருதப்படும் இந்த பகுதியில், நடைபெற்றுள்ள இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version