Site icon Tamil News

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 44 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபட்ட விவகாரம் அடிப்படையற்றது – டிரான் அலஸ்

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரட்சி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ காலி முகத்திடல் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 38 பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. காலி முகத்திடல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறையால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமாதிபர் திணைக்களம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Exit mobile version