Site icon Tamil News

இந்தியாவில் இடித்து விழுந்த 3 மாடிக் கட்டடம் ; மீட்புப் பணிகள் தீவிரம்

மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பையைச் சேர்ந்த ஷாபாஸ் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலையில் மணிக்கு மூன்று மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்தக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. அதையடுத்து அங்கு மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கட்டடம் இடிந்தது குறித்த தகவல் அதிகாலை 4.30 மணிக்கு கிடைத்ததாக தீயணைப்புத்துறையின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விபத்தில் இரண்டு பேரை மீட்டுள்ளதாகவும் மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அந்தக் கட்டடத்தில் 24 குடும்பங்கள் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் போது, கட்டடத்தில் இருந்த 13 குழந்தைகள் உள்பட 52 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், கட்டட இடிபாடுகளில் 5 பேர் சிக்கியிருப்பது தெரிய வந்தது.அவர்களில் இருவர் மீட்கப்பட்ட போதிலும், மூவரில் ஒருவர் பலியான நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஷ் ஷிண்டே கூறுகையில், “இன்று அதிகாலையில் கட்டடம் இடிந்து விழுந்திருக்கிறது. இன்னும் இரண்டு பேர் சிக்கியிருக்கலாம். தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பல்வேறு குழுவினரும் இணைந்து பாடுபட்டு வருகின்றனர்”, என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஜூலை 20ஆம் திகதி, மும்பையின் கிராண்ட் சாலை அருகே உள்ள ரூபினா மான்சில் என்ற கட்டிடத்தின் பால்கனியின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பதின்மூன்று பேர் காயமடைந்தனர்.இடிந்த கட்டடம் பத்தாண்டுகள் மட்டுமே பழமையானது. மீட்புப் பணிகள் துரித நிலையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்டிடுவோம் என்று நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ஷாபாஸ் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.இதற்கிடையில், வானிலை ஆய்வு நிலையம், மகாராஷ்டிராவின் ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே மற்றும் சதாரா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version