Site icon Tamil News

இலங்கையில் மொத்த டெங்கு நோயாளர்களில் 25% பாடசாலை மாணவர்கள் – சுகாதார அதிகாரிகள்

இலங்கையின் மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 25% பேர் பாடசாலை மாணவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என NDCU இன் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன வலியுறுத்தினார். நாட்டில் கடந்த சில மாதங்களில் 42,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மொத்த டெங்கு நோயாளர்களில் 50% பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டின் வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள ஆண்டாக இந்த வருடம் அமையும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலை மேலும் மோசமடைந்து பாரியளவில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர்கள் மேலும் எச்சரிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் டொக்டர். ஹரித அலுத்கே, மொத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 20% டெங்கு அபாயகரமான பிரதேசங்களாக இதுவரை மாறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கண்டி, புத்தளம், குருநாகல், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான அளவு டெங்கு பரவல் காணப்படுகின்றது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version