Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் 19 வயது இளைஞன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவில் அரசியல்வாதி ஒருவரைக் கொலை செய்யும் திட்டங்களுடன் அவரின் அலுவலகத்திற்குள் சென்ற பதின்மவயது இளைஞன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அந்த 19 வயது இளைஞர், சிட்னிக்குக் கிட்டத்தட்ட 170 கிலோமீட்டர் வடக்கில் உள்ள நியூகாசலில், நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரான டிம் கிராக்கந்தோர்ப்பின் அலுவலகத்திற்குள் ஜூன் 26ஆம் திகதி நுழைந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவர் அருகில் உள்ள அரும்பொருளகத்தில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் ஆயுதங்களும் உத்திபூர்வக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

அவர் இரவு முழுதும் தடுத்துவைக்கப்பட்டார். அதன் பிறகு, பயங்கரவாதச் செயலுக்குத் திட்டமிடுதல், அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு அவர்மீது ஜூன் 27ஆம் திகதி குற்றஞ்சாட்டப்பட்டதாக காவல்துறை அறிக்கை கூறியது.

அந்தப் பதின்மவயது இளைஞன் ஜோர்தன் பேட்டன் என்று அடையாளம் காணப்பட்டார். பேட்டன் பிணைக்கு விண்ணப்பிக்கவில்லை என்று நீதிமன்றப் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

பேட்டன் பிரபலப் பிரமுகர்களுக்கும் ஊடகங்களுக்கும் ஆவணம் ஒன்றை அனுப்பியிருந்ததாக காவல்துறை அறிக்கை தெரிவித்தது.

அவர் குடிநுழைவுக்கு எதிர்ப்பு, பன்முகக் கண்ணோட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை விளக்கிய 200 பக்கங்கள் கொண்ட ஆவணத்தைப் பகிர்ந்துகொண்டதாக ஊடகங்கள் கூறின.

இந்நிலையில், தாமும் தமது ஊழியர்களும் அந்தக் கடுமையான சம்பவத்தில் காயமடையவில்லை என்று கிராக்கந்தோர்ப் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

Exit mobile version