Site icon Tamil News

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து!

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் மற்றும் இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் ஆகியோரிடம் இது குறித்து சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுத் தூதுவர்களுடான சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சம்பந்தன், இலங்கைக்கான புதிய கனேடியத் தூதுவரையும், புதிய ஆஸ்திரேலியத் தூதுவரையும் சந்தித்தோம். இந்தச் சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது.

இன்றைய அரசியல் நிலைமை, அரசியல் தீர்வு சம்பந்தமான நிலைமை, பொருளாதார நெருக்கடி நிலைமை, நாட்டைவிட்டுப் பெருமளவிலான மக்கள் வெளியேறும் நிலைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசினோம்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கை பௌத்த – சிங்கள மயமாக்கும் நோக்குடன் அரசு செயற்படுகின்றமை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல் அரசு இழுத்தடிக்கின்றமை தொடர்பிலும் பேசினோம்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசுக்குச் சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் எனத் தெரிவித்தார்.

Exit mobile version