Site icon Tamil News

10 கோடி மதிப்புள்ள சொத்தினை தனி நபரிடமிருந்து அதிகாரிகள் மீட்டனர்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சன்னதித் தெருவில் 1.13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சத்திரம் மற்றும் இடத்தில் வரும் வருமானத்தை கொண்டு  வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவின் 10 நாட்களுக்கும் திருக்கழுக்குன்றம் சன்னதித் தெருவில் அமைந்துள்ள சத்திரத்தில் அனைத்து வகுப்பினருக்கு உணவு அளித்தல் மற்றும் உற்சவம் செய்துவர வேண்டும் எனவும் அறக்கட்டளை சொத்துக்களை எக்காலத்திலும் விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் இராஜகோபால் செட்டியார் என்பவர் 1909 ஆம் ஆண்டு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலுக்காக உயில் எழுதி இந்து சமய அறக்கட்டளையை ஏற்படுத்தியுள்ளார்.

உயில் சாசனப்படி செய்ய வேண்டிய கட்டளைகளையும்,உற்சவங்களையும், அறக்கட்டளையினை நிர்வகித்து வந்தவர்கள் செய்ய  தவறியதுடன்  சத்திரத்தையும் முறையாக பராமரிக்காமல், சத்திரத்தின் ஒரு பகுதியினை பல நபர்களுக்கு விற்பனை செய்து, பட்டா மாற்றம் செய்தும் உள்ளனர் இந்த விபரம் கோயில் நிர்வாகத்திற்கு தெரியவந்ததன் பேரில், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ள அறக்கட்டளை நிலங்களை மீட்டு ராஜகோபால் செட்டியார் எழுதி வைத்த உயில் சாசனத்தின் படி

தொடர்ந்து கட்டளையை நிறைவேற்றும் வகையில்  செங்கல்பட்டு மாவட்ட  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இலஷ்மி காந்த பாரதிதாசன் உத்தரவுப்படி அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் சக்திவேல் என்பவர் சமய அறக்கட்டளை நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டு, இன்று சொத்துக்கள் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இச்சொத்தின் இன்றைய மதிப்பு சுமார் 10 கோடிக்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Exit mobile version