Site icon Tamil News

யானையால் பறிபோன இரு உயிர்கள்

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனிடையே யானையை விரட்ட முயன்ற போது மகேஷ் குமார்(36) என்பவரை எதிர்பாராத விதமாக யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை அவரது உடலின் அருகிலேயே சுற்றி திரிந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

பின்னர் தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவத்திற்கு வந்த தடாகம் காவல்துறையினர் மகேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யானை வரும் பொழுது  உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தால் யானையை விரட்டும் பணியை வனத்துறையினர் பாதுகாப்பாக மேற்கொள்வார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே போல் ஆனைக்கட்டி துவைப்பதி மலை கிராமத்தில் அதிகாலை சிறுநீர் கழிக்க சென்ற மருதாச்சலம் என்ற நபரை மற்றொரு காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

ஒரே நாளில் வெவ்வேறு பகுதியில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களது ஊர்மக்கள் இடையேயும் சொந்தங்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version