Site icon Tamil News

முறையற்ற வரி விதிப்புக்கு எதிராக போராட்டம் : அவசர பிரிவை தவிர வேறு எதுவும் இயங்காது என எச்சரிக்கை!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்திய அரச மருத்து அதிகாரிகள் சங்கம் நாளைய தினம் (திங்கட்கிழமை) 4 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

தமக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாதபட்சத்தில் செவ்வாய்கிழமை முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இவ்வாறாக நாடு முடங்கும் பட்சத்தில் அதனால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். புதிய வரி வசூலிப்பு திட்டத்தை அரசாங்கம் மீளப்பெறும் வரை எமது போராட்டம் கைவிடப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை துறைமுகம் , பெற்றோலியம் , மின்சக்தி , நீர்வழங்கல் , கல்வி , உயர் கல்வி , தபால் , வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் சகல சேவைகளும் முடங்கும் வகையில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளன.

Exit mobile version