Site icon Tamil News

நாளை முதல் பண்டிகைக் காலம்: பொருட்களின் விலையை உயர்த்தினால் தண்டிக்கப்படுவார்கள்

 

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பின் பின்னணியில் நாளை ஆரம்பமாகவுள்ள பண்டிகைக் காலத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தைக்கு வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காய்கறிகள், பழங்கள், முட்டை, கோழிக்கறி மற்றும் பிற அன்றாட உபயோகப் பொருட்களின் விலைகள் உயர் மட்டத்தில் உள்ளன.

தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 65 ரூபாயை தாண்டியுள்ளது. சில மாதங்களுக்கு முன், ஒரு முட்டை, 35 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை விற்கப்பட்டது.

பண்டிகை காலத்தை குறிவைத்து சில வியாபாரிகள் செயற்கையாக முட்டை விலையை உயர்த்தியுள்ளதாக முட்டை வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி 15 மில்லியன் முட்டைகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று இரவு தீவை வந்தடைய உள்ளது. முட்டை விலையைப் போலவே சந்தையில் கோழிக்கறி விலையும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1400 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து சந்தையில் மாபியாவொன்று செயற்படுவதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், சந்தையில் காய்கறிகளின் விலை இன்னும் அதிகமாக உள்ளது.

இதேவேளை, VAT என்ற போர்வையில் பொருட்களின் விலைகளை அநியாயமாக உயர்த்தும் கடைக்காரர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வட் வரி விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு சில வர்த்தகர்கள் பொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே பொருட்களின் விலைகளை அநியாயமாக உயர்த்திய வர்த்தகர்கள் தொடர்பில் தமது அதிகாரசபைக்கு முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version