Site icon Tamil News

நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்க மாட்டேன்

தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும்  மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

தாம்  பிரபலமானதை செய்வதற்கு அன்றி சரியானதைச் செய்வதற்காகவே இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பிரபலமான கருத்துக்களை முன்வைப்பதன் மூலமே நாட்டுக்கு அழிவு ஏற்பட்டது  எனவும் தெரிவித்தார்.

முப்படைகளின்  தளபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (01) அநுராதபுரம் விமானப்படை முகாமில்  இராணுவம், பொலிஸ் மற்றும் ஏனைய படையணிகளை சந்தித்து உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.

சுதந்திரமான கருத்துக்களை வெளியிடவோ அல்லது தன்னை விமர்சிக்கவோ எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை உள்ள போதும் வீதிகளில் கலவரம் செய்வதற்கு எவருக்கும் உரிமையில்லை எனவும்  ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த விடயத்தை நான், பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாட்டுக்கு விளக்கமளித்து  வருகின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தை தெளிவுபடுத்திய பின்னர், கடந்த வியாழனன்று  அது தொடர்பில் பொருளாதார நிபுணர்களை அறிவூட்டவும் சந்தர்ப்பம் கிடைத்தது. முப்படை மற்றும்  பொலிஸாரை இன்று  சந்திக்கிறேன்.

மேலும், பல்கலைக்கழக  பொருளாதார நிபுணர்களை சந்திக்கவும் எதிர்பார்க்கிறேன்.  ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் இந்த விடயம்  தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரையும்  தெளிவுபடுத்த  நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version