Site icon Tamil News

கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை!

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதியினால் நடத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பேசிய அமைச்சர், கோழி இறைச்சி சந்தையில் விலை உயர்வால் மக்கள் படும் இன்னல்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மூலம் கோழி இறைச்சி சந்தையின் விலையை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் நுகர்வுக்காக கோழியை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் விவசாய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிக குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்காக தாய் விலங்குகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Exit mobile version