Site icon Tamil News

குற்றச்சாட்டுகள் உள்ளவரை IGPயாக நியமிக்க வேண்டாம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அடிப்படை உரிமைகள் மீறல் அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள எந்தவோர் அதிகாரியையும் அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள எந்த அதிகாரியையும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு (IGP) நியமிக்க வேண்டாம் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பதவி, மார்ச் 23ஆம் திகதி வெற்றிடமாகவுள்ளதாக வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையில் மேற்குறிப்பிட்ட கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

எந்தவிதமான களங்கமும் இல்லாத மற்றும் இலங்கை பொலிஸ் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக இலங்கை பொலிஸ் மீது பொதுமக்களின் நம்பிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அந்த பதவி வெற்றிடத்துக்கு  சிறந்த நியமனம் வழங்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version