Site icon Tamil News

இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பில் எதிர்வு கூறியுள்ளது.

எவ்வாறாயினும் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை பதிவாகக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலை முதல் காங்கேசன்துறை ஊடாகப் புத்தளம் வரையான கடற்பிராந்தியங்களிலும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேநேரம், கொழும்பு, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 4 மணிவரை அமுலில் இருக்குமெனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நெலுவ, தவலம, மாபாலகம, நாகொட மற்றும் தல்கஸ்வல உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version