Site icon Tamil News

நூதனமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற விமானப் பணியாளர்! கைது செய்த சுங்கத்துறை

கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானப் பணியாளர் ஒருவர் தங்கம் கடத்தியதாகக் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகச் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் வயநாட்டைச் சேர்ந்த ஷாபி என்பவர் ஏர் இந்தியா விமான நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் 1487 கிராம் தங்கத்தைக் கடத்தியதற்காகக் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஹ்ரைன்-கோழிக்கோடு-கொச்சி சர்வீஸ் கேபின் க்ரூ உறுப்பினர் ஷாஃபி என்பவர் தங்கம் கொண்டு வருவதாகச் சுங்கத் தடுப்பு ஆணையகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. ஷாபி இரண்டு கைகளிலும் தங்கத்தைச் சுற்றி நன்கு கட்டிக்கொண்டு,தனது முழு கை சட்டையால் மறைத்துக் கொண்டு தங்கத்தைக் கடத்த திட்டமிட்டுள்ளார்.சுங்க அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் காவல் துறை ஷாபியை பரிசோதனை செய்துள்ளது.சோதனையில் அவரது உடலைப் பரிசோதிக்கையில் கைகளிலிருந்த தங்கம் அகப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஷாபியை சுங்க துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து சுமார் 3.32 கோடி மதிப்பிலான 6.8 கிலோ எடையுள்ள தங்கத்தைக் கடத்தி சென்ற இருவரைச் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version