Site icon Tamil News

அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் யூடியூப் – தவறான வீடியோக்கள் நீக்கம்

மருத்துவத் தகவல் வழிகாட்டு நெறிமுறைப்படி புற்றுநோய் குறித்த தவறான உள்ளடக்கங்கள் கொண்ட வீடியோக்களை யூடியூப்பில் இருந்து நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணி ஆகஸ்ட் 15ம் திகதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவத்துறை யூடியூப் தளத்தில் வெளியிடக்கூடிய மருத்துவம் சார்ந்த வீடியோக்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தி இருந்தது. மேலும், கொரோனா காலகட்டத்தில் பல தவறான சிகிச்சை முறைகள் யூடியூப் வழியாக பரவியது. இது மக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, யூடியூப் நிறுவனமும் மருத்துவம் சார்ந்த வீடியோக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த நிலையில், தற்போது யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் என்று பல தவறான உள்ளடக்கங்களைக் கொண்ட வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், மருத்துவத் தகவல் வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஒழுங்குபடுத்தப்பட உள்ளது.

‘புற்று நோய்க்கான சிகிச்சை ஆபத்தானது, பயனற்றது என்று மக்களிடம் தவறான கருத்துக்களை ஊக்குவிக்கும் ஊடகங்களும் நீக்கம் செய்யப்படும். மேலும், தொழில்முறை மருத்துவ சிகிச்சைகளை பலவீனப்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட வீடியோக்கள், ஊடகங்களை நீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான பணி ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி முதல் தொடங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, புற்றுநோயை பூண்டு மூலம் குணப்படுத்த முடியும், கதிரியக்க சிகிச்சைக்கு பதிலாக வைட்டமின் சி கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள் என்ற தவறான உள்ளடக்கங்களைக் கொண்ட, சிகிச்சை முறைகள் தொடர்பான வீடியோக்கள் கண்டறியப்பட்டு வருகிறது. அவை விரைவில் முழுமையாக நீக்கம் செய்யப்படும்.

மேலும், மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு தவறான தகவல் பதிவுகளையும் நீக்குவதற்காக மருத்துவத் தகவல் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவிர, நோய்க்கான சிகிச்சை தொடர்பாக உலக சுகாதார தகவல் ஆணையத்தின் பரிந்துரைப்படி வீடியோக்கள் ஆராயப்பட்டு வருகிறது. அவற்றில் முரண்பட்ட தகவல் கொண்ட வீடியோக்களை நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மருத்துவத் துறை சார்ந்த விவாதங்கள், ஆக்கப்பூர்வமான பேச்சுக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்’ என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version