Tamil News

ஹொரவ்பொத்தான-திம்பிரியத்தாவல கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் ;7 வீடுகள் சேதம்

ஹொரவ்பொத்தான-திம்பிரியத்தாவல கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏழு வீடுகள் இன்று அதிகாலை (21) சேதமடைந்துள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது கிராமத்தை அண்டிய பகுதியில் யானையின் சரணாலயம் அமைந்துள்ளதாகவும், வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைகள் அனைத்தும் இங்கே விடப்பட்டுள்ளதாகவும், குறித்த யானைகள்
கிராமத்துக்குள் உள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.

நேற்றிரவு முதல் இன்று (21) அதிகாலை வரைக்கும் ஏழு வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டுத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள கத்தரி, மிளகாய், மரவள்ளி,வாழை மரம் போன்ற மரங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

யானைகளினால் வீடுகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் உடனடியாக உடைந்த வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் யானைகளின் தாக்குதல் அதிகரித்து வருகின்றமையால் யானை மின் வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version