Site icon Tamil News

மும்பை அணியில் பாண்டியாவுக்கு நடந்தது என்ன? உண்மையை வெளியிட்ட பும்ரா!

ஹர்திக் பாண்டியா மீது விமர்சனங்கள் வந்தபோது மும்பை அணி வீரர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தோம் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்த வீரர்களில் ஒருவர் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். அவர் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஐபிஎல் தொடர் முடியும் வரை பல எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அவருடைய கேப்டன்சி முதல் ஐபிஎல் பார்ம் வரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.

அப்படி ட்ரோல் செய்த சமயத்திலும், சுனில் கவாஸ்கர், ஹர்பஜன் சிங், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் அவருக்கு ஆதரவாக பேசினார்கள். அப்படி தான், ட்ரோல்கள் வந்தபோது மும்பை வீரர்கள் அனைவரும் ஹர்திக் பாண்டியாவுக்கு உறுதுணையாக இருந்ததாக மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பேசியுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது பேசிய அவர்” எங்களுடைய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு நடந்த அந்த சம்பவத்தை எல்லாம் பெரிதான ஒரு விஷயமாகவே சக அணி வீரர்களாகிய நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த போது எங்களுடைய அணி ஒன்றாக அவருடன் நின்றோம். இது போன்ற விஷயத்தை நாங்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம்.” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய பும்ரா “அவர் மீது வைக்கபட்ட விமர்சனங்கள் அவரை மிகவும் காயப்படுத்தியதாக நான் நினைக்கிறன். எனவே, அந்த மாதிரி சமயத்தில் அவருக்கு ஆறுதலாகவும், உறுதுணையாகவும் மும்பை வீரர்கள் இருந்தோம்” எனவும் கூறினார். ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ட்ரோல்கள் ஒரு பக்கம் எழுந்த நிலையில், மற்றோரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ஒரு பிளவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. எனவே, அதனை மனதில் வைத்து அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாகவும் ஜஸ்பிரித் பும்ரா சூசகமாக பேசியுள்ளார்.

மேலும், விமர்சனங்கள் வந்தாலும் அந்த விமர்சனங்கள் அனைத்தையும் பாசிட்டிவாக மாற்றும் வகையில், உலகக்கோப்பை 2024 டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா பாராட்டுகளை வாங்கினார். அது குறித்து பேசிய பும்ரா “நாங்கள் உலகக்கோப்பை போட்டியை வென்ற பிறகு எதிர்மறையான விமர்சனங்கள் கதை அப்படியே தலைகீழாக மாறியது. எனவே, ஹர்திக் பாண்டியாவுக்கு எப்போதெல்லாம் ஆதரவு தேவையோ நாங்கள் ஒன்றாக எப்போதும் நிற்போம்” என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

Exit mobile version