Tamil News

மீண்டும் மன்னராட்சி வேண்டும்; நேபாளத்தில் வெடித்தது போராட்டம்..!

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாளத்தில் மன்னர் ஆட்சி இருந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு அது முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீண்டும் மன்னராட்சி கோரி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்றபோது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களைக்கொண்டு பொலிஸாரை தாக்கினர். பதிலுக்கு, தடியால் அடித்தும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் பொலிஸார் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தினர்.

Nepal riot police rout protesters seeking restoration of monarchy | Reuters

இந்நிலையில், மீண்டும் போராட்டம் வெடிக்காமல் தடுக்கும் நோக்கில் காத்மாண்டுவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சில பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தை முன்னின்று நடத்திய பிரபல தொழிலதிபர் துர்கா பிரசாய் என்பவரது வீடு அமைந்துள்ள காத்மாண்டுவின் பக்தாபூரில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிரதமரின் வீடு, குடியரசுத் தலைவர் மாளிகை உள்ள இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த காத்மாண்டு மாவட்ட தலைமை அதிகாரி ஜிதேந்தர பஸ்நெட், “நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதும், போராட்டத்தின்போதும் அரசியல் சாசனம் வழங்கி உள்ள பேச்சு சுதந்திரம் மீறப்பட்டுள்ளது. மக்களை தூண்டும் விதமாக சிலர் பேசினர். இதன் காரணமாக, வன்முறை வெடித்தது. பலர் பொதுச் சொத்துக்களை நாசம் செய்தனர்” என்றார்.

Exit mobile version