Site icon Tamil News

வெற்றிக்கு வித்திடும் நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் வழிகள்

வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது. வெற்றிக்கு வித்திடும் இந்த நேர்மறையான எண்ணங்களை எல்லோரும் வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை என்ற பதிலே வரும்.

வாழ்க்கையில் பலரும் சூழல் காரணமாக பத்து சதவிகிதமாவது எதிர்மறை எண்ணங்களை (negative thinking) கொண்டிருப்பார்கள். அது அப்படி ஆகிவிடுமோ இது இப்படி நடந்து விடுமோ எனும் எதிர்மறை எண்ணங்கள் பலரையும் எதையும் செய்ய முடியாமல் தவிர்த்து விடுகிறது.

ஆனால் நேர்மறை எண்ணங்கள் பல நல்ல விஷயங்களை ஒருவரது வாழ்வில் தருகிறது. நேர்மறை எண்ணங்களால் ஆரோக்கியம் பெருகி ஆயுள் காலம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது. இதயநோயினால் ஏற்படும் இறப்பு ஆபத்து குறைகிறது. கஷ்டமான காலங்களில் கஷ்டங்களை தாங்கி, மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை அளிக்கிறது. நல்வாழ்வு அமைகிறது. இப்படி நேர்மறை எண்ணங்களை பற்றி பல சிறந்த விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். இந்த 5 வழிகளைப் பின்பற்றி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிப்போம்.

1. நகைச்சுவை உணர்வு

நகைச்சுவையான மனதை வெளிக்கொண்டு வரவும். தினசரி நிகழ்வுகளில் ஒரு நகைச்சுவையான விஷயத்தை நாட வேண்டும். வாழ்க்கையில் முடிந்த அளவில் சிரித்தால், குறைந்த மன அழுத்தத்தை உணர்வோம். மன அழுத்தம் நேர்மறை எண்ணங்களுக்கு எதிரி.

2. நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை தேர்ந்தெடுத்தல்

நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடம் பழகுவது அவசியம். உங்களுடன் வரும் மனிதர்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆதரவாக நல்ல பல அறிவுரைகளை தந்து, உங்களது கருத்துக்களை காது கொடுத்து பொறுமையுடன் கேட்பவராக இருப்பவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும். இதனால் அவர்கள் மூலம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

3. எதிர்மறையாக பேசுபவர்களை தவிர்த்தல்
எப்போதும் எதிர்மறையான கருத்துகள் கூறுபவர் களிடமிருந்து விலகியே இருங்கள். ஏனெனில் அவர்கள் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். இதனால் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டும் கேள்விக்குறியாகி வாழ்க்கை சிக்கலாகும்.

4. சுய சிந்தனை மூலம் நேர்மறை எண்ணங்களை வளர்த்தல்
நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சில வழிகளை பின்பற்றலாம். உதாரணத்திற்கு ‘இதற்கு முன் நான் இந்த செயலை செய்ததே இல்லை’ என்று ஒரு விஷயத்தை யோசிப்பதை விட, ‘புதிதாக ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்று நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அதேபோல் ‘இந்த செயலை செய்ய மிகவும் கடினமாக இருக்கிறது’ என்று எண்ணாமல், ‘நான் வேறொரு கோணத்தில் இதை அணுகி சமாளிப்பேன்’ என்று சிந்திக்க வேண்டும். இப்படி எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திக்க பயிற்சி எடுக்க வேண்டும்.

5. மற்றவர்களுக்கு உதவுவது
மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதிலிருந்து விடுபட மற்றொரு நபருக்கு ஏதாவது நன்மை செய்ய முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது தவறான எண்ணங்களிலிருந்து கவனத்தை வேறு நல்ல விஷயத்தில் திசை திருப்ப முடியும். மற்றவருக்கு செய்யும் நன்மைகளால் மனத்திருப்தியும் ஏற்படும். இதனால் நல்ல எண்ணங்கள் மனதில் உருவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் வெற்றி எளிதில் வசப்படும்.

Exit mobile version