Site icon Tamil News

இந்தியாவில் மைக்ரோசாப்ட் பிரவுசர் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை ! ஹேக்கர்களால் காத்திருக்கும் ஆபத்து

இந்தியாவில் மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துவோருக்கு, ஹேக்கர்களின் தாக்குதல் அபாயம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தற்போது பெரும் பயன்பாட்டில் இருக்கும் கூகுள் குரோம் பிரவுசர் வருகைக்கு முன்பு வரை மைக்ரோசாப்டின் உலாவிகளே இணையத்தில் முதலிடம் பிடித்திருந்தன. கூகுள் குரோமிடம் முதல் இடத்தை பறிகொடுத்த போதும் மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் இரண்டாம் இடத்தில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த வகையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தி இணையத்தில் சஞ்சரிப்போருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு குழு வழங்கியிருக்கும் இந்த எச்சரிக்கை, மைக்ரோசாப்ட் எட்ஜ் இணைய உலாவிகளை பயன்படுத்துவோர் உடனடியாக அதனை அப்டேட் செய்யுமாறு வலியுறுத்துகிறது. அவ்வாறு புதுப்பிக்காத மைக்ரோசாப்ட் எட்ஜ் பதிப்புகளில் இணையத்தில் உலவுவோர், ஹேக்கர்களால் தாக்கப்படும் ஆபத்து காத்திருக்கிறது. இந்த வகையில் அங்கீகரிக்கப்படாத அணுகலை பெறவும், கணினியில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் களவாடவும் வாய்ப்பாகக் கூடும்.

இதன் மூலம் குறிப்பிட்ட கணினியை ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ள வாய்ப்பாகும். தொடர்ந்து கணினியில் இருக்கும் தரவுகளைத் திருடுவது முதல், தங்கள் உளவு மென்பொருட்களை கணினியில் நிறுவவும் சாத்தியமாகக் கூடும். ஹேக்கர்களின் திருவிளையாடல் காரணமாக இணையத்தில் இதர வைரஸ், மால்வேர் உள்ளிட்டவற்றின் தாக்குதலுக்கும் கணினி இலக்காகக் கூடும். மைக்ரோசாப்ட் எட்ஜ் சார்ந்த பாதிப்பினை இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு குழு, ‘உயர் தீவிரம்’ என்ற வகைப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.

ஹேக்கர்களால் தனிப்பட்ட தரவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள், வங்கி சார்ந்த நிதித்தகவல்கள் ஆகியவற்றை பறிகொடுக்க வாய்ப்பாவதுடன், அப்படி களவாடிய தரவுகளைக் கொண்டு வங்கி இருப்பை குறிவைக்கவும் சாத்தியமாகும். இவை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளைத் தவிர்க்க, இணைய உலாவிகளை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்குமாறு இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு குழு வலியுறுத்தி உள்ளது. அதுவரை ஐயத்துக்கு இடமான இணைப்புகளை சொடுக்காது தவிர்க்குமாறும், வலுவான பாஸ்வேர்ட் கட்டமைப்புகளை செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version