Tamil News

பிரிட்டனில் வன்முறை ஆர்ப்பாட்டம்; 90க்கும் மேற்பட்டோர் கைது

பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் தீவிர வலதுசாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்ததால் 90க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஓன்-டிரெண்ட், பிளெக்பூல், பெல்வாஸ்ட் ஆகிய நகரங்களில் வன்முறை வெடித்தது. இங்கு பொருள்கள் வீசப்பட்டதுடன், கடைகள் சூறையாடப்பட்டன. சில இடங்களில் காவல்துறையினர் தாக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. வேறு இடங்களில் நடைபெற்ற சின்னச் சின்ன ஆர்ப்பாட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

வெறுப்புணர்வைத் தூண்டும் தீவிரவாதிகளுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வழி செய்யும் வகையில் அவர்களுக்கு முழு ஆதரவு தரப்படும் என்று பிரதமர் கெயர் ஸ்டார்மர் தெரிவித்தார்.

அமெரிக்க மேடைப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் பாணியில் சவுத்போர்ட் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியில் மூன்று இளம் வயதுப் பெண்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

UK far-right demonstrations turn violent, more than 90 arrested | RNZ News

லிவர்பூல் நகரில், செங்கற்கள், போத்தல்களுடன் தீப் பிழம்பும் காவல்துறையின் மீது வீசப்பட்டது. அங்கு நடைபெற்ற வன்முறையில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு சம்பவத்தில், மோட்டார்சைக்கிளில் வந்த காவல்துறையைச் சேர்ந்தவரை உதைத்து தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பிரிட்டனில் குடிநுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கிட்டத்தட்ட ஆயிரம் போராட்டக்காரர்களுக்கு எதிராக மற்றவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

லிவர்பூல் நகரின் லைம் ஸ்திரீட் ரயில்வே நிலையத்தில் கூடிய சில நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கு குரல் கொடுத்தனர். அத்துடன், அவர்கள் அகதிகள் வரவேற்கப்படுவர் என்றும் முழக்கமிட்டனர்.

கலவரத் தடுப்பு காவல்துறையினர் காவல் நாய்களுடன் வந்து இரு பிரிவு ஆர்ப்பாட்டக்கார்களையும் தடுத்து நிறுத்த சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அவர்கள் கூடுதல் காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த வன்முறை ஞாயிறு அதிகாலை வரை தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் காவல்துறையினர் மீது தீப் பந்தங்கள் வீசி எறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version