Site icon Tamil News

கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க தூதரக அதிகாரி – இந்தியா எதிர்ப்பு

கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது.

அமெரிக்காவின் கருத்து தேவையற்றது என வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்து உள்ளது.

டில்லியில், மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், சமீபத்தில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை கைது செய்தது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், ‛‛ கெஜ்ரிவால் கைது குறித்த தகவல்களை கண்காணித்து வருகிறோம். கெஜ்ரிவால் வழக்கில் நேர்மையான வெளிப்படையான மற்றும் விரிவான சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்யப்பட வேண்டும்” என கருத்து தெரிவித்து இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டில்லியில் உள்ள தூதரகத்தின் துணை தலைமை அதிகாரி குளோரியா பார்பெனாவுக்கு சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து குளோரியா பார்பெனா, டில்லியின் தெற்கு பிளாக்கில் உள்ள வெளியுறவு அமைச்சகம் முன்பு ஆஜரானார்.

முன்னதாக கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனியும் கருத்து தெரிவித்து இருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, ‛‛ இது இந்தியாவின் உள்விவகாரத்தில் அப்பட்டமான தலையீடு ” எனக்கூறியிருந்தது.

Exit mobile version