Site icon Tamil News

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த புத்தர்சிலை திறப்பு

திருகோணமலை சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில், வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுவந்த புத்தர்சிலை திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டது. இவ்விடத்திலேயே தற்போது பாரிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு புத்தர்சிலை நிறுவப்பட்டுள்ளது.

குறித்த சட்ட விரோத கட்டுமானம் தொடர்பாக திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து நகரசபையின் செயலாளர் 23.03.2024 அன்று சனிக்கிழமை அப்பகுதிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கட்டுமானங்களை பார்வையிட்டிருந்தார். குறித்த கட்டுமானப்பணிகளுக்காக நகராட்சி மன்றம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட எவ்வித அனுமதிகளும் பெறப்படாத நிலையிலேயே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான 2 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகள் 200க்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியிலேயே சட்ட விரோதமான முறையில் புத்தர்சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இதுபோன்ற செயற்பாடுகள் இன நல்லிணக்கத்தை பாதிக்கும் எனவும் தமிழ் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இதுபோன்ற பௌத்த மயமாக்கலின் மூலம் தமிழர் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுடைய காணிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், சிறிய புத்தர் சிலை வைப்பதில் தொடங்கி அது விகாரையாக மாற்றப்பட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் வரையிலான செயற்பாட்டை அரச அனுசரணையுடன் சிலர் செய்து வருவதாகவும் இதற்கு அதனுடன் சம்பந்தப்பட்ட அரச நிர்வாகமும் துணை போவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version