Site icon Tamil News

கொழும்பில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானங்கள் – அரசாங்கத்தின் அவசர முடிவு

கொழும்பு மாநகரப் பகுதி உட்பட புறநகர்ப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் W.S. சத்தியானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரப் பகுதி உட்பட புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிறிய நீர்வழிகள் மற்றும் பக்கவாட்டு வடிகால்கள் தடைபட்டமையே வெள்ளப்பெருக்கிற்கு முக்கியக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் செயலாளர் கூறுகிறார்.

இலங்கை நில அபிவிருத்திக் கழகம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் இணைந்து கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரன் பாலசூரிய தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்காக காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் 07 விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத் தணிப்பு திட்டம் 03 கட்டங்களின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் இந்த வேலைத்திட்டம் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும்.

Exit mobile version