Site icon Tamil News

பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் மீண்டும் அதிரடி கைது

பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றத்திந்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூபர் டி.டி.எப்.வாசன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் வைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், 45 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் சிறையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் இருந்து வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனிடையே சமீபத்தில் ஹைவேயில் கார் ஓட்டி சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்து விட்டதாக தனது ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை அஜாக்கிரதையாகவும் கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவதும் அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளதாக மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து அண்ணாநகர் காவல்துறையினர் பைக்ரேஸரான டி.டி.எப். வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் வாசனை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version