Site icon Tamil News

வெப்பமண்டல இரவு – சியோல் நகரில் 118 ஆண்டுச் சாதனை முறியடிப்பு

தென்கொரியத் தலைநகர் சியோலில் தொடர்ந்து 26ஆவது நாளாக ‘வெப்பமண்டல இரவு’ பதிவாகியுள்ளது.இதன்மூலம் 118 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1907ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆக அதிக காலமாக வெப்ப மண்டல இரவு நீடிக்கிறது.

இரவு 6.01 மணியிலிருந்து மறுநாள் காலை 9 மணிவரை குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கு மேலிருப்பது வெப்பமண்டல இரவு என அழைக்கப்படுகிறது.

“வடக்கிலிருந்து குளிர்ந்த காற்று வீசுவதில்லை. தென்மேற்கிலிருந்து வெப்பமான காற்று வீசுவதால், வெப்பநிலை தொடர்ச்சியாக 25 டிகிரியை ஒட்டி அல்லது அதற்குமேல் பதிவாகி வருகிறது,” என்று சோல் நகர வானிலை கணிப்புப் பிரிவு இயக்குநர் யோன் கி ஹான் கூறினார்.

இந்நிலையில், சியோல் நகரை வெப்பம் வாட்டுவது அடுத்த வாரம் வரையிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இத்தகைய நீண்ட சூழல் வழக்கத்திற்கு மாறானது என்று யோன் குறிப்பிட்டார்.

“பொதுவாக, இக்காலகட்டத்தில் வடமேற்கிலிருந்து குளிர்காற்று வீசும் என்பதால் காலை, மாலை வேளைகளில் வெப்பநிலை குறைந்துவிடும். ஆனால், இப்போதைக்கு இன்னும் அதற்கான அறிகுறியே தெரியவில்லை,” என்றார் அவர்.

இதனிடையே, தென்கொரியாவின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான பூசானிலும் 22ஆவது நாளாக ‘வெப்பமண்டல இரவு’ பதிவாகியுள்ளது. 1904ஆம் ஆண்டிற்குப் பிறகு அங்கு ஆக அதிக காலத்திற்கு வெப்பமண்டல இரவு பதிவாகியிருப்பது இதுவே முதன்முறை.

Exit mobile version