பிரித்தானிய குடியேற்றத்தில் பெரிய மாற்றம் – நிகர இடம்பெயர்வு 69% சரிவு
பிரித்தானியாவில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் வெளியிட்ட தகவல்களின் படி, 2025 ஆம் ஆண்டு முழுவதும் மொத்தமாக 100,625 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2025 ஆண்டு ஜூன் மாதம் வரை பிரித்தானியாவின்
நிகர இடம்பெயர்வு 204,000 ஆக பதிவாகியுள்ளது. இது 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2024 ஜூன் மாதம் வரையான
காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 69% குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.”
இந்த காலப்பகுதியில், பிரித்தானியாவுக்கு குடியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 898,000 ஆக காணப்பட்டது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31% குறைவு. ஆனால் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 693,000 ஆக உயர்ந்து, 7% அதிகரித்துள்ளது.
இதேவேளை, சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையும் கவனத்தை ஈர்த்துள்ளது. 2026 ஜனவரி 1 முதல் மார்ச் 9 வரை 3,409 பேர் இவ்வாறு பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.
மேலும், குடியேற்றம் தொடர்பான பல முக்கிய அம்சங்கள் பற்றியும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில், புகலிடம் கோருபவர்கள் தங்கும் ஹோட்டல்கள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், நாடுகடத்தல் நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை போன்றவை அடங்குகின்றன.
இந்த புள்ளிவிபரங்கள், பிரித்தானிய குடியேற்ற நிலைமையில் கடந்த ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க மாற்றங்களை சுட்டிக்காட்டுகின்றன.





