Site icon Tamil News

உலக யானைகள் தினம் இன்று!

உலகில் உள்ள காட்டு யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் திகதி உலக யானைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக காட்டு யானைகளின் தாயகமாக விளங்கும் இலங்கைக்கு இது மிகவும் முக்கியமான நாள், ஏனென்றால் யானைகளின் பாதுகாப்பில் முன்பை விட அதிக கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

கணக்கெடுப்புகளின்படி, இலங்கையில் யானைகளின் சனத்தொகை 6,000க்கு அருகில் உள்ளது. மகாவலி வனவிலங்குப் பகுதி நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான யானைகளின் தாயகமாகும், மேலும் அங்கு வாழும் யானைகளின் எண்ணிக்கை 2,000 ஐ நெருங்குகிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது சூழ்நிலைகளில், காட்டுயானைகள் கொல்லப்படுகின்றன. அதேபோல் யானைகளில் அட்டகாசத்தால் மனிதர்களும் உயிரிழக்கின்றனர். இதற்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.

இலங்கையில் கடந்த ஆண்டில் மட்டும் 433 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதில் யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி 125 மனிதர்கள் பலியாகியுள்ளனர். இன்று (12.08) கூட கஹட்டகஸ்திகிலிய  பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும், மனித நடவடிக்கைகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் காட்டு யானைகள் குறித்தும் அண்மைய நாட்களில் அதிகமாகக் கேள்விப்படகூடியதாக இருந்தது.

ஸ்டன் துப்பாக்கியால் தாக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ள அக்போ, இரும்பு கம்பியில் அடிபட்டு தும்பிக்கையில் பலத்த காயம் அடைந்த கிரந்துருகோட்டை யானை அலியா, இவ்வாறு பல யானைகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version