Site icon Tamil News

TNPL – முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல்

8-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

அந்த அணியில் ஓரளவுக்கு சமாளித்த சுஜய் 22 ரன்களும், ராம் அரவிந்த் 27 ரன்களும், ஆதீக் உர் ரஹ்மான் 25 ரன்களும் அடித்ததால் அந்த அணி கவுரமான ஸ்கோரை எட்டியது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு லைகா கோவை கிங்ஸ் 129 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விமல் குமார் மற்றும் ஷிவம் சிங் முறையே 9 மற்றும் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், பாபா இந்திரஜித் இருவரும் பொறுப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய அஸ்வின் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

பாபா இந்திரஜித் 32 ரன்களில் அவுட்டானார். அஸ்வின் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்சாகி ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் 18.2 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.

இதன்மூலம் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

 

Exit mobile version