Site icon Tamil News

இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 412 டெங்கு நோயாளர்கள் நேற்று முன்தினம் பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு 19 ஆவது வார நிறைவில், 1294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இந்த வருடத்தின் 19ஆவது வார நிறைவில் 2029 டெங்கு ​நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்று பதிவான 412 டெங்கு நோயாளர்களில் 261 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். இவர்களில் 132 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள். கம்பஹா மாவட்டத்தில் 98 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் புகைக்கான இரசாயனம், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒன்றரை வருடங்களுக்குத் தேவையான அளவு இரசாயனம் கையிருப்பில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்

டெங்கினை கட்டுப்படுத்துவதற்கான இரசாயன திரவத்தினை தேவை ஏற்பட்டால் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், டெங்குவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தின் செயற்திறன் குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Exit mobile version