Site icon Tamil News

தேசிய கடன் மறுசீரமைப்பு பிரேரணையை பலவந்தமாக நிறைவேற்றிய அரசாங்கம் – திஸ்ஸ அத்தநாயக்க!

அரசாங்கம் பலவந்தமாகவே தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றியது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிராக வாக்களித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த சட்ட மூலம் பலவந்தமாகவே நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

காரணம் முழுமையான விவாதம் நிறைவடைந்த பின்னரே வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்.

ஆனால் திடீரென 7.30 மணியளவில் சகல விவாதங்களை நிறுத்தி வாக்கெடுப்புக்கு செல்வதாக அறிவித்தார். இதனால் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் சபையில் இருக்கவில்லை எனக் கூறினார்.

அத்துடன் தேசிய கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 12 டிரில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், பொதுமக்கள் மீது இவ்வாறு பாரிய சுமையை சுமத்தியிருப்பது பெரும் தவறாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அரசாங்கம் பலவந்தமாகவே தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும், பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை காணப்படுவதால் எம்மால் அதனை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version