Tamil News

நெதர்லாந்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தீவிர வலதுசாரி கட்சி!

நெதர்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய கீர்த் வில்டர்ஸ் தலைமையிலான சுதந்திரக் கட்சி (பிவிவி) எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றுள்ளது.

150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்து நாட்டு நாடாளுமன்றக் கீழவை பிரதிநிதிகள் சபைக்கு நவம்பர் 22ம் திகதி புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், பிவிவி கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னதாக, வெறும் 17 இடங்களை மட்டுமே வைத்திருந்த அந்தக் கட்சியின் பலம் இரண்டு மடங்குக்கும் மேலாகும் என்று பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்க்கவில்லை. தற்போது பதவி விலகும் பிரதமர் மார்க் ரூட் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சியான விவிடி-க்கு வெறும் 20 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

அதனை தொடர்ந்து, கீர்த் வில்டர்ஸ் தலைமையில் அடுத்த அரசு அமைவது உறுதியாகியுள்ளது. தீவிர வலதுசாரி நிலைப்பாட்டை கொண்ட கீர்த் வில்டர்ஸ், இஸ்லாம் மதத்துக்கு எதிரான கடுமையான கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

Dutch election: Anti-Islam populist Wilders set for gains, exit poll says |  Elections News | Al Jazeera

தேர்தல் நேரத்தில் இஸ்லாம் எதிர்ப்பு பிரசாரத்தை அவர் முன்வைக்காவிட்டாலும், அதற்கு முன்னர் குரான், மசூதிகள், ஹிஜாப், முஸ்லிம் மதத் தலைவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது குறித்து தற்போது பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

கீர்த் வில்டர்ஸின் வெற்றியை தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் ஹங்கேரியின் வலதுசாரி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த மற்ற தலைவர்களுக்கு கீர்த் வில்டர்ஸின் வெற்றி கவலையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும், தீவிர ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பாளரான அவர், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரெக்ஸிட்டைப் போல் ‘நெக்ஸிட்’ நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். புதிய அரசை அமைப்பதற்காக ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவை தற்போது கீர்த் வில்டர்ஸ் கோரியுள்ளார்.

Exit mobile version