Tamil News

பிரபல சீரியல் நடிகை ஜெயலட்சுமி கைது… சினேகன் தான் காரணமா?

சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வருவதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, சினிமா பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி விளம்பரம் தேடி வரும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பொலிஸார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பாடலாசிரியர் சினேகன் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாடலாசிரியர் சினேகனும் தன் அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் வசூல் செய்யும் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் பொலிஸார் பாடலாசிரியர் சினேகன் மீது ஆபாசமாக பேசுதல், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி மற்றும் ஆவணங்கள் மோசடி ஆகிய இரண்டு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், பாடலாசிரியர் சினேகன் அளித்த மோசடி புகாரில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமியை அவரது இல்லத்தில் வைத்து நேற்று முன்தினம் (20) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Exit mobile version