Site icon Tamil News

பெண்களின் கூந்தல் பராமரிப்பிற்கான இலகுவான வழி!

வீட்டையும் நிர்வகித்து, வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு தங்களை பராமரித்துக் கொள்வதற்கான நேரம் குறைவாகவே இருக்கும்.

குறிப்பாக கூந்தல் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவது சிரமமான செயலாகும். சில எளிய முறைகளை பின்பற்றினால், கூந்தல் பராமரிப்பு எளிதாக மாறும். அதற்கான வழிகள் இங்கே…

முடியின் வேர்க்கால்களில் இயல்பாகவே எப்போதும் எண்ணெய் சுரக்கும். எனவே, தினசரி தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. குறைந்தது 2 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிப்பது நல்லது.

தூசு, மாசு, வாகனப் புகை, கடுமையான வெயில் போன்றவற்றால், தலைமுடி கடுமையான பாதிப்புக்குள்ளாகும். ஆகையால் வெளியே செல்லும்போது தலைமுடியை ஸ்கார்ப், துப்பட்டா போன்ற துணிகளைக்கொண்டு மூடிக்கொள்ளலாம்.

அலுவலகத்துக்கு அவசரம் அவசரமாக புறப்படும்போது, ஈரமாக இருக்கும் தலைமுடியை ‘டிரையர்’ கொண்டு உலர்த்தாதீர்கள். என்றாவது ஒரு நாள் உபயோகித்தால் பரவாயில்லை. அடிக்கடி உபயோகிக்கும்போது கூந்தல் வலுவிழக்கும். கூந்தல் நுனியிலும் பிளவு ஏற்படும். எனவே, முடிந்த அளவு கூந்தலை இயற்கையான முறையில் உலர்த்துவதே நல்லது.

வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு எண்ணெய்க் குளியல், இயற்கையான வீட்டுப் பொருட்களைக் கொண்டு ‘ஹேர் மாஸ்க்’ போன்றவற்றை உபயோகிக்கலாம். இது கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், கூந்தல் பராமரிப்பிற்காக மருத்துவரின் ஆலோசனைகளையும் பின்பற்றத் தவறாதீர்கள். நாம் சாப்பிடும் உணவு, கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், அதிக கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்த்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம். அலுவலகப் பணிகள், வீட்டு வேலைகள் காரணமாக பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதுவும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணியாக அமைகிறது. இதற்கு எளிய தீர்வாக தினமும் மோரில் கறிவேப்பிலையை பொடியாகவோ அல்லது இலைகளை அரைத்து விழுதாகவோ கலந்து குடித்து வரலாம். நல்ல பலனைத் தரும்.

Exit mobile version