Site icon Tamil News

கூகுள் மேப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இடங்களை தத்ரூபமாக காட்டவும், எளிதில் அடையாளம் காணவும் கூகுள் மேப் வண்ணங்களில் மாற்றத்தை செய்திருக்கிறது.

பயணங்கள் இன்றி வாழ்க்கை இல்லை. ஆனால் தற்போதைய நவீன காலத்தில் கூகுள் மேப் இல்லாத பயணங்களே இல்லை என்ற அளவிற்கு ஒவ்வொரு பயணத்திலும் கூகுள் மேப் இன்றியமையாத தேவையாக மாறி இருக்கிறது. ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கக்கூடிய அனைவருமே தற்போது கூகுள் மேப்பை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக வாகன ஓட்டிகளுடைய உற்ற நண்பனாக இருப்பது கூகுள் மேப்கள் தான்.

முன்பெல்லாம் ஒரு ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால் வழியில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய போர்டுகளை பார்த்தும், மக்களிடம் விவரங்களைக் கேட்டும் சேரும் இடத்தை நோக்கி பயணங்கள் அமையும். ஆனால் தற்போது புறப்படும் இடத்திலிருந்து கூகுள் மேப்பை ஸ்டார்ட் செய்துவிட்டால் போதும் சேரும் இடத்தை எவ்வளவு நேரத்தில் அடைய முடியும் எந்தப் பகுதியில் வாகன நெரிசல் இருக்கிறது, எந்த ரோட்டில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, எந்த பகுதியில் செல்வது எளிது, எந்த பகுதியில் உணவகம் இருக்கிறது, மருத்துவமனை, பெட்ரோல் பங்க், எங்கு கோயில்கள் இருக்கின்றன என்று செல்லக்கூடிய பாதையில் உள்ள அனைத்து விவரங்களையும் கூகுள் மேப் தந்து விடுகிறது. இதனால் பயணம் எளிதாகிறது. இதன் காரணமாக பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் கூகுள் மேப்பை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் கூகுள் மேப்பை மேலும் மேம்படுத்த புதிய அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய அப்டேட் மூலம் கூகுள் மேப்பின் வண்ணங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. கட்டிடங்களை மேலும் உண்மைத் தன்மையுடன் காட்டும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஈஸியாக இடங்களை அடையாளம் காண முடியும் என்கிறது கூகுள் நிறுவனம்.

மேலும் பூங்கா மற்றும் வனப்பகுதிகளை அறிய முன்பிருந்த பச்சை நிறத்தில் சிறிது மாற்றத்தை செய்திருக்கிறது கூகுள். சாலைகள் முன்பு வெள்ளை, மஞ்சள் நிற கோடுகளால் இருந்த நிலையில் தற்போது பழுப்பு நிற கோடுகளை கொண்டு காட்சியளிக்கின்றன. இடங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த புதிய அப்டேட் இருக்கும் என்று கூகுள் மேப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version