Tamil News

பிரிட்டனில் பற்றி எரிந்த விமான நிலையம் ; 1500க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரை

பிரிட்டன் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பெட்போர்ட்ஷையர் மாகாணத்தில் உள்ள லூடன் சர்வதேச விமான நிலையத்தில் கார் நிறுத்தும் கட்டிடத்தின் 3வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். அப்போது கார்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின.

சிறிதுநேரத்தில் கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ரசாயனம் தெளித்தும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் 1500க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்தன. தீயை அணைக்கும் போது மூச்சுத்திணறி 6 வீரர்கள் மயக்கம் அடைந்தனர்.

Luton Airport: Video shows burning car that may have sparked inferno

தீ விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக விமான நிலையத்திற்குள் பொதுமக்கள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

மேலும் லூடன் விமான நிலைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் நிலைமை சீரடைந்ததை அடுத்து விமானநிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

Exit mobile version