Site icon Tamil News

கொழும்பில் ஆசிரியை கொலை!! பொலிசாரின் விசாரணையில் சிக்கிய நபர்

கொழும்பு, கருவாத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருவாத் தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயராம மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கடந்த 15 ஆம் திகதி கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆசிரியர் ஒருவர் எனவும் குறித்த சம்பவம் இடம்பெற்ற அன்று காலையும், பிற்பகல் வேளையிலும் சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் குறித்த வீட்டுக்கு வருகை தருவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியிருந்தன.

அதன்படி குறித்த நபர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரை கைது செய்திருந்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்து விட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன்போது சந்தே நபரிடமிருந்து கையடக்க தொலைபேசி, மடிக்கணனி மற்றும் இரண்டு எரிவாயு சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version