Site icon Tamil News

உண்மையான போரைப்போல பயிற்சியை தீவிரப்படுத்த தைவான் திட்டம்

தைவானின் வருடாந்திர போர்ப் பயிற்சி இம்முறை ஏதோ பயிற்சி நடத்தினோம் என்றில்லாமல், கிட்டத்தட்ட உண்மையான போரில் பங்கேற்பதுபோன்றதாக இருக்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

சீனாவின் பகைமை அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் உண்மையான சண்டையை உருவகப்படுத்தும் பாவனைப் பயிற்சி இடம்பெறும் என்றார் அவர்.

ஜனநாயக முறையில் ஆட்சி நடத்தி வரும் தைவானை தனது எல்லைக்குட்பட்ட பிரதேசம் என்று தொடர்ந்து கூறி வரும் சீனா, அதற்கு தைவானை அடிபணிய வைக்க கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தத் தீவைச் சுற்றி போர்ப்பயிற்சி நடத்தி வருகிறது.ஆனால், சீனாவின் கோரிக்கையை தைவான் கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், இவ்வாண்டின் போர்ப்பயிற்சியை தைவான் ஜூலை 22ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டு உள்ளது. ஹான் குவாங் என்பது அந்த ஐந்து நாள் பயிற்சியின் பெயர்.இதுகுறித்துப் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத தைவானின் மூத்த தற்காப்பு அதிகாரி ஒருவர், போர்ப் பயிற்சி நடத்தும் முறை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டு உள்ளதாகக் கூறினார்.

“அண்மைய ஆண்டுகளாக பகைமை அச்சுறுத்தல் வேகமெடுத்து வருகிறது. அதற்கேற்ற வகையில் எங்களது தற்காப்புப் போர்த் திட்டத்தை தொடர்ந்து மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.“விரிவான முறையில் அவசரமாக போர்ப் பயிற்சியை நடத்துவது மிக மிக முக்கியம்.“வெறும் காட்சிக்காகவும் ஒத்திகையாகவும் நடத்தப்படும் பயிற்சிகள் இம்முறை ரத்து செய்யப்பட்டு உள்ளன. இரவுநேரப் பயிற்சி இம்முறை இடம்பெறும். மேலும், போர்ப் பயிற்சியில் தலைநகர் தைப்பேயும் சேர்த்துக்கொள்ளப்படும்.“புள்ளிகளைப் பெறுவதற்காக நடத்தப்படும் பயிற்சியாக அது இருக்காது. இது உண்மையில் போர் போன்றது என்று வீரர்கள் கருத வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.“பயிற்சியில் வாகனங்கள் சேதமடைவது போன்றவையும் நிகழக்கூடும். இருந்தாலும் பரவாயில்லை. உண்மையான சண்டையில் இதுபோன்ற பிரச்சினைகள் வரக்கூடும்.“பயிற்சிகள் என்பது ஒரு தொடர் அனுபவம். போர் என்று வரும்போது இரவு, பகல் பார்க்கக்கூடாது,” என்றார் அந்தத் தற்காப்பு அதிகாரி.

Exit mobile version