Site icon Tamil News

சூரியகுமாரின் பிடியெடுப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் வீரர் சூரியகுமார் யாதவ் எடுத்த பிடி தொடர்பான சர்ச்சை நீள்கிறது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.

தென்னாபிரிக்க அணி போட்டியில் வெற்றி பெறுவதற்கு 16 ஓட்டங்கள் தேவையாக இருந்த வேளையில், ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் டேவிட் மில்லர் அடித்த பந்து உயர்ந்து சென்று எல்லைக்கோட்டுக்கு அருகில் பிடியெடுப்பாக மாறியது.

சூரியகுமார் யாதவ் இந்தப்பிடியை எடுத்த போது அவர் எல்லைக்கோட்டை மிதித்ததாகவும், ஆனால் அது கருத்திற் கொள்ளப்படாமல் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் வெள்ளை நிறத்திலான கோடு ஒன்று தென்படுவதுடன் அதனை சூரியகுமார் யாதவ் தாண்டிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் இந்த வெள்ளை நிறக் கோடானது, மைதானத்தில் எல்லைக் கோட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்ததாகவும், போட்டியின் ஆரம்பத்திலேயே, மைதானத்தில் பயன்படுத்தப்படுகின்ற ஆடுகளத்துக்கு ஏற்ப எல்லைக் கோடு மாற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஆடுகளத்தின் தூர இடைவெளிக்கு அமைவாக எல்லைக்கோட்டை மாற்றியமைத்த போது, குறிப்பிட்ட வெள்ளை நிறத்தினால் சுவடு அப்படியே இருந்துள்ளது என்று, இந்த போட்டியின் புள்ளிவிபரவியலாளராகப் பணியாற்றிய ரஜ்னீஸ் குப்தா விளக்கமளித்துள்ளார்.

Exit mobile version