Site icon Tamil News

‘உலகப் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதற்கு வல்லரசுகள் தலைமையேற்க வேண்டும்’ – சீன பாதுகாப்பு அமைச்சர்

சீனா அண்டை நாடுகளுடனான ராணுவ உறவுகளை மேம்படுத்தும் என்று அந்நாட்டுத் பாதுகாப்பு அமைச்சர் செப்டம்பர் 13ஆம் திகதி கூறியுள்ளார்.உலகப் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதற்கு வல்லரசுகள் தலைமையேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒருதரப்பின் இழப்பை மறுதரப்பின் லாபமாகக் கருதும் மனப்போக்கையும் சிறிய, வலுவற்ற நாடுகளைத் துன்புறுத்தும் போக்கையும் வல்லரசுகள் கைவிடவேண்டும் என்றும் அவர் கூறினார்.அமைச்சர் டோங் ஜுன், பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனாவின் வருடாந்தர ராணுவக் கருத்தரங்கில் உரையாற்றினார்.

இன்றைய உலகில் எந்தத் தரப்பும் வெறும் பார்வையாளராக மட்டும் செயல்பட இயலாது என்றார் அவர். பெரிய நாடுகள், சிறிய நாடுகள், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்திற்கும் அனைத்துலக விவகாரங்களில் பங்கேற்கவும் தங்கள் தேவைகளைத் தெரிவிக்கவும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

90 நாடுகள், அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்த மூன்று நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

வட்டார நாடுகளுடனான ராணுவ உறவுகளைச் சீனா மேம்படுத்திக்கொள்ளும் என்றும் வளரும் நாடுகளுடனான ராணுவ உறவுகளை விரிவுபடுத்தும் என்றும் அமைச்சர் டோங் குறிப்பிட்டார்.வட்டாரப் பதற்றங்களுக்குத் தீர்வுகாண, வட்டார நாடுகள் ஒன்றுபட்டு வலுவடைய வேண்டும் என்றும் அவற்றின் அமைதிக்கு அவை தங்கள்மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். மற்ற நாடுகளின் உரிமைகள், நலன்களுக்குப் புறம்பாக நடந்துகொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

சில நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கிற்கு மேலை நாடுகள் பெரும்பாலும் உயர்நிலை அரசதந்திரிகளை அனுப்புவதில்லை.

கருத்தரங்கின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள், பகிர்ந்துகொள்ளப்படும் வருங்காலத்துக்காக அமைதியை மேம்படுத்துதல் என்பதாகும். கருத்தரங்கு செப்டம்பர் 14ஆம் திகதி நிறைவடையும்.

Exit mobile version