Site icon Tamil News

இலங்கையில் புதிதாக இணைய வழி கடவுச்சீட்டு முறைமை – ஒரே நாளில் குவிந்த விண்ணப்பங்கள்

இலங்கையில் புதிதாக இணைய வழி கடவுச்சீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ் இதுவரை 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கடவுச்சீட்டை பெற செல்பவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணத்தை பெறும் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் பதிவாகியிருந்தது.

அதனை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களுக்கான சேவையை இலகுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டது.

அதற்காக இணைய வழியில் விண்ணப்பம் கோரல் திட்டம் கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறைமையின் ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்கள் தங்களது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் முறைப்பாடு அளிக்க அல்லது கணினி தொடர்பான தகவல்களைப் பெற, 1962 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் உப அலுவலகங்கள் இணையவழியில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்த நபர்களின் கைரேகைகளை ஏற்றுக்கொள்ளும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version