Tamil News

இலங்கையின் வங்கிகள் அமைப்பு அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கடன் மீள் அறவிடல் சட்டங்களை மாற்றியமைப்பதற்கு முன்னதாக மாற்றுவழிமுறைகள் குறித்து மத்திய வங்கியின் ஊடாக விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இலங்கையின் வங்கிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இக்கட்டமைப்பானது, ‘தற்போதைய சூழ்நிலையில் கடனை மீளச்செலுத்தமுடியாததன் விளைவாக வணிக மற்றும் கைத்தொழில் துறையினர் முகங்கொடுத்திருக்கும் அழுத்தங்களை சீரமைப்பதை முன்னிறுத்தி செயற்திறன்மிக்கதும், உரியவாறு ஒருங்கிணைக்கப்பட்டதுமான முறையொன்று கையாளப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான கலந்துரையாடல்களை அரசாங்கம் மத்திய வங்கியின் ஊடாக வர்த்தக வங்கிகளுடன் முன்னெடுப்பது இன்றியமையாததாகும்’ என்று அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடனை மீளச்செலுத்தமுடியாமல் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வணிகங்கள், கடன் மீள் அறவீடு தொடர்பான சட்டங்களை மாற்றியமைக்குமாறு வலியுறுத்திவரும் பின்னணியிலேயே இலங்கையின் வங்கிகள் அமைப்பு மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சுமார் 2 ட்ரில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய கடன்மறுசீரமைப்பு மற்றும் கடன் மீள்செலுத்துகை இடைநிறுத்தம் என்பன மேற்கொள்ளப்பட்ட நிலையில், இவ்வருடத்தின் முதற்காலாண்டில் மீட்சியை நோக்கிய முயற்சிகள் வலுப்பெற்றதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி மத்திய வங்கி ஒழுங்குபடுத்தல் செயன்முறையின்கீழ் வங்கிக்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுவதே தமது பிரதான நோக்கம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பு, இந்நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு வாடிக்கையாளர் வைப்புக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அல்லது பங்குதாரர்களின் மூலதனம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இன்றியமையாததாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version