Site icon Tamil News

விசா இன்றி குவைத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் சுமார் 2,000 பேர் இலங்கைக்கு வருவதற்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைக் குறிப்பிட்டுள்ள குவைத் தூதரகத்தின் பேச்சாளர், படிப்படியாக அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.

அவர்களும் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்த இலங்கையர்களின் குழுவாகும்.

மேலும், கடந்த 12ஆம் திகதி குவைத்தில் இருந்து 33 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.

அதன்படி, இந்த இரண்டு வாரங்களில் குவைத்தில் வீட்டு வேலை செய்யச் சென்று விசா இன்றி தங்கியிருந்த, ஆனால் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட 64 இலங்கையர்கள் இலங்கை வந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.

Exit mobile version