Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமான 1700 ரூபாயை வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் தொடர்பாக டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறுத் தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பெருந்தோட்டக் கம்பனிகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், எதிர்கால நடவடிக்கைகளுக்காக குழுக்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் குறித்து ஆலோசிக்க ஒரு குழுவை நியமிக்கவும், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மற்றுமொரு குழுவை நியமிக்கவும் இதன்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஆசிய நாடுகளின் சனத்தொகை அதிகரிப்புடன் உணவுத் தேவையும் அதிகரிக்கும் எனவும், அதற்காக இந்நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரம் தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version