Tamil News

தூத்துக்குடியில் 2,500 கோடி முதலீடு செய்யும் ஸ்பெயின் நிறுவனம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

உலக அளவில் சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் முன்னணியில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் பயணமாக சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில்துறையினரை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர் தமிழ்நாட்டில் நிலவும் சூழல் மற்றும் அரசு முதலீட்டாளர்களுக்கு செய்துவரும் நலன்கள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்திருந்தார்.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைக்கும் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனம், தமிழ்நாட்டில் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

தூத்துக்குடியில் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய ஹபக் லாய்டு நிறுவனம் ஒப்பந்தம்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு, சரக்கு போக்குவரத்து திறமையாக கையாளுவது மிகவும் அவசியமானதாகும். தமிழ்நாட்டில் உள்ள 4 பெரும் துறைமுகங்களை பயன்படுத்தி சரக்குகளை கையாளும், கண்டெய்னர் துறைமுகங்கள், சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “அந்த வகையில் சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெஷ்பர் கான்ஸ்டிரப் மற்றும் இயக்குனர் ஆல்பர்ட் லொரெண்டே ஆகியோர் முதலமைச்சரை நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முதலீடு மூலம் ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபார்டிஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் தமிழ்நாடு முதல்வரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும் தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளது என்பதையும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவது அவசியம் எனவும் தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபார்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version