Tamil News

நாய்க்கறி விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதித்து மசோதா நிறைவேற்றியது தென்கொரியா

நீண்ட இழுபறிக்குப் பின்னர் நாய்க்கறி விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கும் மசோதாவை, தென்கொரிய நாடாளுமன்றம் இன்று(9) நிறைவேற்றி உள்ளது.

நாய்க்கறி உண்பதை வழக்கில் பின்பற்றும் வெகுசில நாடுகளில் ஒன்றாக தென்கொரியாவும் இருந்து வருகிறது. தலைமுறை இடைவெளியில் நாய்க்கறி உண்பது தென்கொரியர்கள் மத்தியில் குறைந்து வந்தது. செல்லப்பிராணியாக நாய்களை வளர்ப்பது, விலங்கு மீதான அதிகரிக்கும் அபிமானம், மேற்கு நாடுகளின் தாக்கம் ஆகியவை காரணமாக தற்போதைய தலைமுறையினர் மத்தியில் நாய்க்கறி தவிர்க்கப்பட்டு வருகிறது.

ஆனபோதும் பிராய்லர் கோழிகள் போல, பண்ணை வைத்து நாய்களை வளர்ப்பது தென்கொரியாவில் குறைந்தபாடில்லை. கறிக்கான நாய்களை வளர்க்கும் சுமார் 3,500 பண்ணைகள் தென்கொரியாவில் காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 15 லட்சம் நாய்கள் கறிக்காக வளார்க்கப்படுகின்றன. நாட்டில் நாய்க்கறிக்கு என்றே 3000க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகின்றன.

தென்கொரியாவின் நாய்க்கறி எதிர்ப்பு போராட்டம்

இந்த நாய்க்கறி உணவகங்கள் மற்றும் பண்ணைகளை சார்ந்தோரே, நாய்க்கறி தடை மசோதாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். நாய்க்கறி சாப்பிட்டுப் பழகிய மூத்த தலைமுறையினர் நவீன மாற்றத்துக்கு ஏற்ப அவற்றிலிருந்து விடுபடவும், மாற்று அசைவங்களில் தங்களை திருப்திபடுத்திக்கொள்ளவும் தயாராக உள்ளனர். எனவே நாய்க்கறி வணிகத்தை மேற்கொள்வோரின் போராட்டம் பிசுபிசுத்தது.

நாய்க்கறிக்கு எதிரான மசோதாவை கொண்டுவந்ததில் அதிபர் குடும்பத்துக்கும் முக்கியப் பங்குண்டு. அடிப்படையில் வழக்கறிஞரான தற்போதைய அதிபர் யூன் சுக் யோல், விலங்குகள் அபிமானத்துக்காகவும், அவற்றுக்காக குரல் கொடுத்ததிலும் கவனம் பெற்றவர். அவரது மனைவியும் தென்கொரியாவின் முதல் பெண்மணியுமான கிம் கியோன் ஹீ, 6 நாய்கள் உட்பட ஏராள்மான செல்லப்பிராணிகளை தத்தெடுத்து வளர்ப்பவர்.

நாய்க்கறி பிரியர்கள் மற்றும் வணிகர்களின் நலனுக்காக, 3 ஆண்டு அவகாசத்துக்குப் பின்னரே இந்த சட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. நாய்க்கறி தொழிலில் ஈடுபடுவோருக்கு மாற்று தொழிலுக்கான உபாயங்கள் மற்றும் நிதி உதவிகளை அரசே முன்வந்து வழங்க உள்ளது. சட்டம் அமலுக்கு வந்ததும் அதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது தென்கொரிய கரன்சி மதிப்பில் 30 மில்லியன் அபராதம் ஆகியவை விதிக்கப்படும்

Exit mobile version